01 August 2018
22:30
படிக்க வைத்த பிராமணர்கள்
“எனக்கு இருந்த அந்தண ஆசிரியர்கள் போல் இன்றைய ஆசிரியர்கள் இல்லையே என்று வருத்தப்படுகிறேன்” இப்படி சொன்னவர் இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள்.
திமுக ஆட்சியில் (1997-2001) கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் சொன்னது, இதை திருச்சி தினமலர் பதிப்பு பதிவு செய்திருந்தது.
பிராமணர்கள் மட்டும் தான் பள்ளிக்கூடம் சென்றார்கள், மற்ற சமூகத்தினர் படிக்கவில்லை என்ற எண்ணம் பரவலாக இன்றைய இளைய தலைமுறையினரிடம் கூட பரவியுள்ளது.
இது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட பொய். பிராமணர்கள் கூட ஒப்புக்கொள்ளும் அளவு உண்மையைப்போல மாறிவிட்டது.
எல்லா சமூகத்தினரையும் போல பிராமணர்களிலும் படிக்காதவர்கள் உண்டு. சமையல் வேலை, கோவில் அர்ச்சகர்கள் பதவி என்று இருந்தார்கள், இருக்கிறார்கள்.
எல்லா சமூகத்தினரும் படிக்கவேண்டும் என்று பிராமணர்கள் பலர் தமிழகத்தில் பள்ளியை துவங்கினார்கள். ஜாதி, மத பேதமின்றி அவர்கள் ஆற்றிய சமூக தொண்டு ஏனோ எங்கும் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டது.
பள்ளியை ஆரம்பித்தது மட்டுமல்ல பொறுப்புள்ள ஆசிரியர்களாக இருந்த பிராமண சமூகத்தினரின் தியாகம்/அக்கறை பிராமண எதிர்ப்பு சிந்தனை கொண்ட இயக்கத்தில் இருந்த இனமான பேராசிரியரால் கூட பாராட்டப்பட்டது என்றால் பாருங்கள்.
கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமம் தேப்பெருமாள் நல்லூர்.
டேய் பசங்களா! இங்க வாங்கடா! என்று குழந்தைகளை கூப்பிட்டார்கள் அந்த சகோதரர்கள். மீனாட்சி சுந்தரமய்யர், கிச்சாமி சார் என்றழைக்கப்படும் கிருஷ்ணஸ்வாமி அய்யர்.
கிச்சாமி சார்
மணலை பரப்பினார்.. ஹரி ஓம் என்று நாராயண மந்திரத்தினை சகோதர அய்யர்கள் உச்சரித்தார்கள். குழந்தைகள் வழி மொழிந்தது.
ஒவ்வொரு குழந்தைகளாக “அ “ என்ற எழுத்தை விரல் பிடித்து எழுத வைத்தார்கள்.
“அ” என்று மணலில் எழுத ஆரம்பித்த இடம் தேப்பெருமாள் நல்லூர் அக்ரஹாரம். பஞ்சாபகேசய்யர் வீட்டு திண்ணை.
அதுதான் அன்றைய பள்ளி.
T.P.மீனாட்சி சுந்தரமய்யர் தனது இளைய சகோதரர், T.P.கிருஷ்ண மூர்த்தி அய்யருடன், ஸ்ரீ ராம லக்ஷ்மணரைப் போல கல்விப்பணிகளை துவங்கினர்.
திண்ணை பள்ளி இருந்த வீடு - இன்று
அக்ரஹாரத்து திண்ணை அரிச்சுவடி சொல்லித்தரும் திண்ணை பள்ளியானது.
திண்ணை பள்ளி இருந்த வீடு - இன்று
இந்த கல்வி சகோதரர்களின் தந்தை பஞ்சாபகேச அய்யர் நீதித்துறையில் உயர் பதவியில் இருந்தவர்.
படிக்க.. வா.. என்றால் யாரும் வராத காலம். தங்களது குடும்ப தொழிலுக்கு வயல், கடை வியாபாரம், என்று குழந்தைகளை வேலைக்கு துணையாக வைத்துக்கொள்ளும் சிந்தனையில் பெற்றோர்கள் இருந்த காலம். காரணம் வறுமை.
அக்ரஹாரத்து அந்தண இரட்டையர்கள் ஒவ்வொரு தெருவுக்கும், பக்கத்து ஊர்களுக்கும் சென்றார்கள். படிக்கவாங்கோ அந்தணக்குரலின் அழைப்புக்கு அங்கீகாரம் இருந்தது.
படிப்புன்னா அது பெரிய விஷயம் ஸாமி! எங்ககிட்ட காசு இல்ல.. சாப்பாட்டுக்கு வழி கைத்தொழில்தான் அதுக்கு உதவியா இருக்கிற இந்த குழந்தைகளை படிக்க அனுப்பினா வயித்து பசிக்கு என்ன செய்யறது ஸாமி..
அறியாமையின் குரல் அக்ரஹாரத்தினை நோக்கி..
நீ காசு தரவேண்டாம் மத்தியானம் எங்காத்துல சாப்பாடு உண்டு போதுமா? நாலு எழுத்து படிச்சாத்தான் எதிர்காலமிருக்கும் புரியுதா?
அறியாமையை ஒட்டுவதுதானே அக்ரஹாரம்..
என்னமோ சாமீ நீங்க சொல்லுறீங்க அதனால அனுப்புறோம் அரைகுறை மனதுடன் அனுப்பினார்கள்.
படிக்காதவர்கள்தான்.. ஆனாலும் பண்பாடு உள்ளவர்கள்.
அய்யரு படிப்பு சொல்லித்தராறு, நம்மால அதுக்கு காசு தரமுடியல, ஏதோ நம்மால முடிஞ்சது ..
இந்தா ஒரு படி நெல்லு.. ,
இந்த ஒரு படி உளுந்து ... ,
இந்தா ஒரு படி பயறு... ,
இந்தா இந்த காய்கறிய ஐயா கிட்ட பள்ளிக்கூடத்துக்கு போகும் போது கொடு ..
இப்படி மக்களின் ஆதரவு...
பள்ளிக்கு ஆசிரியர்கள் ஊதியம் குறைவு அதுவும் பஞ்சாபகேசய்யர் பையன்கள் தான் சம்பளத்துக்குப் பொறுப்பு. அப்போது ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து ஆசிரியர் பணிக்கு வந்தவர் ஸ்ரீ ராகவையங்கார்..
சம்பளம் குறைவுதான், ஆனால் ஸ்ரீ ராகவையங்கார் செய்த தொண்டினை இன்னமும் சொல்லுகிறார்கள் 80+ பெரியவர்கள்..
காலத்தினை வென்று நிற்கிறது ஸ்ரீ ராகவையங்கார் செய்த சேவை.
ஆசிரியர்கள் 3, 4 பேர் அவர்களுக்கு சம்பளம் 1 ரூபாய் அதைக் கொடுக்க முடியாத நிலை வந்தது. பேசாமல் விட்டுவிடலாம் என்று எண்ணவில்லை தேப்பெருமாள் நல்லூர் சகோதரர்கள்..
விடாமுயற்சி.. வினைதிட்பம், மனத்திட்பம், முயற்சி, மெய்வருத்த செய்த முயற்சி..
சென்னை, கல்கத்தா, பம்பாய் என்று பெருநகரங்களுக்கு, பலருக்கு கடிதம் எழுதினார் ..அங்கிருந்த அந்தண சொந்தங்களை, பந்தங்களை ஆதரவு கேட்டார்கள் சகோதரர்கள்..
. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பள்ளிக்கு இடம் வேண்டும்.. தனது தோட்டத்தினை பள்ளியாக்கினார். கட்டிடம், கரும்பலகை, நாற்காலி, மாணவர்கள் உட்கார பலகை, முதலீடு, உழைப்பு எல்லாம் அய்யருடையது.
ஆசிரியர் சம்பளத்துக்கு ஆங்கிலேய அரசை தொடர்பு கொண்டு பள்ளியை நடத்த பண உதவி கேட்டார்
ஆங்கில அரசின் உதவியை அதிகாரிகளால் பெற்றார்.
பக்கத்து கிராமங்களான சன்னாபுரம், பிள்ளையாம்பேட்டை, அம்மாசத்திரம், நடுவக்கரை, செம்பியவரம்பல், இரண்டாம் கட்டளை என கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளை பள்ளியில் சேர அழைத்து வந்தார் அக்ரஹாரத்து ஐயர்.
கல்வி என்னும் விளக்கினை தொடர்ந்து பிரகாசமாக கிராமத்தில் ஏற்றினார். ஆம்! கிச்சாமி ,மீனாட்சி
சகோதர அய்யர்கள் கல்வி கடவுளானார்கள் .
கிராமத்துக்கும் மக்களுக்கும் அவர்கள் ஊர் ஸ்வாமி. எழுதறிவித்ததால் இறைவன்... கல்விக்கோயில் கட்டிய கடவுள். இது நடந்தது 110 வருடங்களுக்கு முன்....
1940 / 42 களில் பொருளாதார சூழலால் கல்விக்கூடம் கைமாறியது.. சகோதரர்கள் பம்பாய் சென்றார்கள், அதுவரை அவரது குழந்தைகள் அவர் உருவாக்கிய பள்ளியில் படித்தார்கள்..
அடுத்து பள்ளியை வாங்கியவர் சீ. நாராயணசாமி அய்யர்,
சீ.நாராயணசாமி அய்யர்
கையில் ஊன்றுகோல் கல்வி என்னும் காலத்திறவுகோல் அறிவுத்திருக்கோயிலுக்கு இந்த ஐயரும் அழைத்தார் அனைத்து சமூகமும் வந்தது.
“ஐயர் அழைக்கிறார்” என்றவுடன் பள்ளிக்கு பல சமூகமும் குழந்தைகளினை அனுப்பியது. அந்த ஆண் சரஸ்வதி பள்ளியை பலவிதங்களில் முன்னேற்றினார்.
பள்ளி நோக்கி மாணவர் பட்டாளம். பக்கத்து மினி டவுனில் வந்த அரசு பள்ளியைத் தாண்டி தேப்பெருமாள் நல்லூர் வந்தது அறிவுபசி கொண்ட மாணவர் கூட்டம். காரணம் நல்லூரின் நல்லோர் வட்டம். அக்ரஹாரத்து ஆசிரியர்கள் தந்த ஊட்டம்.
ஸ்ரீ. நா. முத்துமணி சார்
நாராயண ஐயர் (25/8/1888 – 1/2/1963) பணியை தொடர்ந்து அவரது குமாரர் ஸ்ரீ நா.முத்துமணி சார், அவர்கள் பள்ளியின் நிர்வாகியானார். ஆளுமைத் திறன் மிக்க அவரது நிர்வாகத்தில் மேலும் சிறப்புற்றது பள்ளி. முத்துமணி சார் கலைவாணிக்கு கைங்கர்யம் செய்தவர் கலைமாமணி பட்டமும் பெற்றவர்.
தரமான கல்வி, இடவசதி, குடிநீர், கழிப்பறை, தோட்டம், விளையாட்டு அரங்கம், கலை, இலக்கியம், கல்விக்கான உபகரணங்கள், எல்லா வசதிகளுடன் பட்டையை கிளப்பியது பள்ளி.
சுற்றுலா என்றால் அதற்கு ஏற்பாடு தலைமை பண்பை உருவாக்கும் விதமாக முத்துமணிசாரின் முத்தான யோஜனை.
டேய்! நீ இங்க வா, டேய்! எல்லோரும் கவனிக்கணும் இவன் தான் வெளியுறவுத் துறை அமைச்சர்.
குடிதண்ணீர் உன் பொறுப்பு, எல்லோரையும் ஏற்றி விட வேண்டியது உன் பொறுப்பு, பொறுப்புகளை பிரித்து கொடுப்பார்.
பள்ளி நடக்கும் நாட்களில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் மணியை சரியாக ஒவ்வொரு பிரியடுக்கு அடிக்க நியமிப்பார்.
ஓவியத்தில் ஆர்வமுள்ள ஒரு மாணவனுக்கு பள்ளி சுவற்றில் இடம் கொடுத்தார்.
பெண்கள் 5, 6 பேர் தங்கள் வகுப்பை, துடைப்பத்தால் தாங்களே சுத்தம் செய்வார்கள் . காலையில் பிரார்த்தனை, தமிழ்தாய் வாழ்த்து, தேசியகீதம் அதற்கு முன் மாணவர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிறுத்துவார்.
300+ மாணவர்கள் 1 முதல் 8 வகுப்பு வரை, ஆண், பெண் இருபாலர்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பள்ளி மைதானத்தினை சுத்தம் செய்வார்கள்.
ஆம்! பள்ளியை கோயிலாக எண்ண வைத்தார் முத்துமணிசார்..
ஈவேரா (1879-1973) இல்லாவிட்டால் இங்கு யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்று சொல்லுகிறது “பகுத்தறியாத” கூட்டம். ஆனால் அது சாக்கில் வடிகட்டிய பொய் என்பதற்கு தேப்பெருமாள் நல்லூர் பள்ளிக்கூடம் ஒரு ஆதாரம்.
அக்ரஹாரத்து அந்தணர் அன்று(1904) ஏற்றிய அறிவுச்சுடர்.. 110 வருடங்களுக்கு மேலாக இன்றும் ஒளிர்கிறது. தேப்பெருமாள் நல்லூர் நடுநிலைப்பள்ளியாக.
சகோதரரில் ஒருவரான மீனாட்சி சுந்தரம் அய்யர், மற்றொரு அய்யருடன் சேர்ந்து, தேப்பெருமாள் நல்லூர் ஹரிஜன பகுதியில் ஒரு பள்ளியை துவக்கினார். இன்றும் கூட கிச்சாமி சார் குமார்கள் ஸ்ரீ சசிசேகரன் , ஸ்ரீ சந்தானம் இவர்களது வாரிசுகள் என பள்ளிக்கு வந்து பெருமைபடுகிறார்கள்.
பின்பு பொருளாதார சூழலால் பம்பாய் சென்றபிறகு அங்கும் ஆசிரியர் பணியை தொடர்ந்தனர் தேப்பெருமாள் சகோதரர்கள்,
பம்பாய் சென்ற மீனாட்சி சுந்தரம் அய்யர் அந்தேரி பகுதியில் ஸ்ரீ ராம் வெல்ஃபர் என்கிற பெரிய பள்ளியை துவக்கினார். இடைவிடாத கல்விப்பணி கிராமம் முதல் பம்பாய் வரை.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து” ஆமாம்! ஒரு பிறப்பிலே கற்ற கல்வியானது எழுகின்ற பல பிறப்புகளிலும் உதவி செய்யும் தன்மையுடையது இதுதான் வள்ளுவம் சொல்லுவது.
ஆனால் வள்ளுவர் சொன்னதைவிட ஒருபடி மேலே சென்று கிச்சாமிசார் , மீனாட்சி சார் எழுபது தலைமுறை படிக்க அல்லவோ பள்ளிக்கூடம் கட்டிவிட்டார்.
அந்தணர் தந்த அருட்கொடை
பள்ளி நூற்றாண்டுவிழாவை கொண்டாட இருந்த நேரத்தில் தமிழக அரசியல் வார இதழின் ஆசிரியரும் , தேப்பெருமாள் நல்லூர் மண்ணின் மைந்தருமான தொழிலதிபர் பேரன்புக்குரிய திரிசக்தி குழுமத்தலைவர் ஸ்ரீ சுந்தர் ராமன் அவர்கள் “சங்கரன் வளாகம்” என்பதாக தனது முழு செலவில் பள்ளிக்கு முழுமையாக கட்டிடத்தினை கட்டித்தந்து பேருதவி செய்ததை மறக்க இயலாது.
No comments:
Post a Comment