உண்மையில் கடவுள் தேவையா?
சத்குரு:
‘கைலாயம் போன்ற சக்தி வாய்ந்த தலங்கள் இங்கேதானே காணப்படுகின்றன. இந்தியாவின் பூகோள அமைப்பு அதைப் புனிதத்தலமாக்கி இருக்கிறதா? அதனால்தான் புத்தர், ராமகிருஷ்ணர், ரமணர் இன்னும் எண்ணற்ற யோகிகள் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு உதித்தார்களா? என்று என்னிடம் அவ்வப்போது கேட்கிறார்கள்.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தலம் புனிதமாக இருந்ததால் புனிதர்கள் உதிக்கவில்லை. புனிதர்கள் இருந்ததால்தான் தேசம் புனிதத் தலமாகியது. இங்கே மட்டும் இவ்வளவு புனிதர்கள் எப்படி அவதரித்தார்கள்?
பண்பட்ட ஆன்மீகக் கலாச்சாரம்…
வட துருவத்தில் தென்னை மரம் வளர்வதுண்டா? ஒரு மரம் வளர்வதற்கு நிலம், சமூகமான சூழ்நிலை, சரியான தட்பவெப்பநிலை எல்லாம் தேவைதானே! அதேபோல் மனிதன் மேன்மையுற இந்தக் கலாச்சாரத்தில் மிகச் சரியான சூழ்நிலையும் அவசியம். சதா போர்கள், கொலை, கொள்ளை, வன்முறை என்று இருந்தால், அங்கு வளர்ச்சி எதுவும் இருக்காது. பாரதம், போர்கள் இல்லாத அமைதியான தேசமாக இருந்ததால்தான் இங்கு
ஆன்மீகம் தழைத்தோங்கியது. இந்த மண்ணில், பத்துப் பன்னிரண்டாயிரம் வருடங்களாக அந்தச் சூழல் நிலவியதால் மகான்கள் உருவாயினர். இதற்குப் பல ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. இன்னும் பல ஆதாரங்கள் அண்டைய நாட்டு மண்ணிலும், ஆழ்கடலிலும் புதைந்துள்ளன. பூமியின் வேறு எந்தப் பகுதியிலும் இப்படிப்பட்ட சூழல் அமையவில்லை.
அதேபோல், வளைந்து கொடுக்காத விறைப்பான மத நியதிகள் ஆன்மீகம் மேலோங்குவதைத் தடுக்கும். நம் கலாசாரத்தில், கருத்துச் சுதந்திரம் பூரணமாக இருந்தது. எந்த நம்பிக்கையும் மற்றவர் மீது திணிக்கப்படவில்லை. கடவுளை நம்புவதும், நம்பாததும், நடுநிலையில் இருப்பதும் அவரவர் விருப்பத்துக்கு விடப்பட்டது.
ஒரே குடும்பத்தில் ஒருவர் ஆண் கடவுளை வணங்குவார். ஒருவர் பெண் கடவுளைத் துதிப்பார். யானை, நாய், கழுகு, குரங்கு, பாம்பு என்று எதை வேண்டுமானாலும் வணங்க இங்குச் சுதந்திரம் இருந்தது. ஒருவரே கூட எல்லா வகை உருவங்களையும் வழிபடுவார். எதுவும் தவறாகப் பார்க்கப்படவில்லை. மற்ற கலாச்சாரங்களில் கடவுளுடன் பிணைந்திருப்பதுதான் உன்னதமானது என்று நினைக்கப்படுகிறது. இந்தக் கலாச்சாரத்தில் கடவுளை இறுதி இலக்காக வைத்து யாரும் இயங்கவில்லை. முக்தி என்பதைத்தான் இலக்காக வைத்து இயங்கி வருகிறார்கள்.
யோகியின் தேடல்…
ஒரு யோகி, எளிமையான உடையில் பாதையோரம் நடந்து கொண்டிருந்தார். அவரைச் சாத்தான் கவனித்தது. ‘அந்த யோகியை எப்படி ஏமாற்றுகிறேன் பார்’ என்று தன் சகாவிடம் சொன்னது. தன் உருவத்தை ஒரு தேவன் போல் மாற்றிக் கொண்டு, அந்த யோகி சென்ற பாதையில் குறுக்கிட்டது. ‘யோகியே, உங்களுக்கு உதவுவதற்காக நான் கடவுளால் அனுப்பப்பட்டு இருக்கிறேன்’ என்று வணங்கி நின்றது.
யோகி புன்னகைத்தார். “வேறு யாரோ என்று நினைத்து நீ என்னிடம் வந்திருக்கிறாய்… என் தேடலில், நான் கடவுளின் உதவியைக் கேட்கவில்லையே” என்று சொல்லிவிட்டு, யோகி நடந்தார்.
கடவுளா முக்தியா…?
கடவுளைவிடவும் மிகவும் மதிப்பளிக்கப்பட்டது முக்தி என்ற விடுதலைக்குத்தான். வேறு எந்த ஜனத்தொகையும் இந்த மேன்மையான நோக்கம் பற்றி அறிந்திருக்க வில்லை. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தக் கலாச்சாரம்தான் இறுதி விடுதலையை உன்னதம் என்று அறிந்து செயல்பட்டு வருகிறது.
வேறு தேசங்களில் சில மத நம்பிக்கைகள், சில சமூக நம்பிக்கைகள் அவற்றை எதிர்த்தவர்களை கொல்லச் சொல்லியது. சாக்ரடீஸ், மன்சூர் போன்றவர்கள் அப்படித்தான் பலி கொடுக்கப்பட்டார்கள். ஆனால், வேறு மதத்தினரைக் கொண்டுவந்து, ‘என் கடவுளுக்குத் தலைவணங்கு’ என்று ஒருபோதும் இங்கே வற்புறுத்தியது கிடையாது.
இப்படி ஒரு சுதந்திரமானக் கலாச்சாரம் இங்கு நடைமுறையில் இருந்ததால்தான், ஆன்மீகம் தானாகவே வளர்சசியடைந்தது. அதை ஒரு விஞ்ஞானமாக வடிவமைத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழங்கும் நிலையும் உருவானது. எழுத்து வடிவில் அதை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. குருசிஷ்ய பாரம்பரியம் என்ற ஒரு ஆழமான முறையில், அனுபவ ரீதியாக எந்தவிதச் சிதைவுகளும் இல்லாமல், அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கப்பட்டது. இப்படி அதன் தூய்மை காக்கப்பட்டதால்தான் ஆன்மீகம் மலர்ந்தது. வளர்ந்தது.
இன்றைக்கு ஆன்மீகத்தின் கட்டுக்கோப்பு வெகுவாகச் சிதைந்திருந்தாலும், அது (சுதந்திரமான கலாச்சாரம்) இப்போதும் இங்கு வேலை செய்வதற்குக் காரணம், அதன் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருப்பதுதான்.
அப்போலோனியஸ் என்ற கிரேக்கத் தத்துவவாதி ‘எகிப்தில் இருக்கும் கோயில்களின் அமைப்புக்கு இந்திய யோகிகளின் பங்கு அத்தியாவசிமானது’ என்று சொல்லியிருக்கிறார்.
மேற்கத்திய நாகரிகத்தின் அஸ்திவாரமாகக் கருதப்படும் கிரேக்கக் கலாச்சாரம்கூட, பாரதத்திலிருந்துதான் அதன் முக்கியமான அம்சங்களைப் பெற்றது என்று ஆதாரபூர்வமாக சரித்திர ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆன்மீகத்தில் மேம்பட்ட விஷயங்கள் என்று கருதப்பட்டவை எல்லாமே இங்கிருந்துதான் கிரேக்க தேசத்துக்குச் சென்றுள்ளன.
இன்றைக்கு சாதாரண விவசாயி, கூலிவேலை செய்பவர்களிடம் கூட, முக்தி, தர்மம் போன்ற வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நிலையை, உலகின் வேறு எங்கும் காண முடியாது.
மனிதர்கள் மேம்பட்டதனால்தான் அவர்கள் இருந்த தலங்கள் புனிதத் தலங்கள் ஆயின. அப்படித்தான் பாரதம் புனிதத் தலமாகியது. இவ்வாறு மேம்படுவதை தொடர்ந்து கடைப்பிடித்தால் நமக்கு உள்ளேயும் வெளியேயும் நல்லது!.
https://www.hindhu.news
No comments:
Post a Comment