Saturday, March 16, 2019

குழைஞ்ச சாதம் மஹாபெரியவா காஞ்சி பெரியவர்

"குழைஞ்ச சாதம்"

( பக்குவம் வந்தா தானா குழைவு வரும். குழைஞ்சா வாழ்க்கைல எல்லாத்தோடயும் சகஜமா ஒத்துப் போயிடலாம். இது சாதத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கையின் சாரத்துக்கும் இதுதான் அடிப்படை...! )

கட்டுரையாளர்- பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-குமுதம் பக்தி இவ்வாரம் வந்தது.
(ஓரு பகுதி)

ஸ்ரீமடத்துல மகாபெரியவாளோட பரமேஷ்டி குருக்களோட ஆராதனைகள் வருஷா வருஷம் நடத்தப்படறது வழக்கம்.

அந்த ஆராதனையில கலந்துக்க வேதவித்துக்கள் ,வைதீகர்கள்,பண்டிதர்கள்னு பல நூறு பேர் கலந்துக்குவா. ஆராதனைகள் நடக்கிற நாட்கள்ல அவா எல்லாருக்கும் ஒரே சமயத்துல போஜனம் செய்விக்கறது வழக்கம்.

இந்த வைபவம்னு மட்டுமல்லாம ஸ்ரீமடத்தில் விசேஷ ஆராதனைகள் நடக்கற சமயத்துல எல்லாம் நிறைய பேருக்கு ஒரே சமயத்துல சமைக்க வேண்டியிருக்கும்கறதால அதுக்காகவே விசேஷமா சிலரை அழைக்கறது உண்டு.

இந்த மாதிரி ஸ்ரீமடத்துல வைபவங்கள் ஆராதனைகள் நடக்கற சமயத்துலமெல்லாம் குறிப்பிட்ட ஒரு சமையல்காரரை கட்டாயமா கூப்பிடுவா. ஏன்னா, அவரோட கைப்பக்குவம் அலாதியானது மகாபெரியவாளோட பரம பக்தரான அந்த பரிசாரகர் வேற ஒரு ஊர்ல வேலை பார்த்துண்டு இருந்தாலும், அந்த முதலாளிகிட்டே உத்தரவு வாங்கிண்டு மொத வேலையா மடத்துக்கு வந்து சமையல் கைங்கரியத்தை செய்ய ஆரம்பிச்சுடுவார்.

அப்படி சமைக்கறதுக்கு கூலியா எதையும் அவரா கேட்கவும் மாட்டார். மகா பெரியவாளோட திருக்கரத்தால ஆசிர்வாதம் செஞ்சுதரப்படறதை வாங்கிக்கறதும், அவர் சார்புல ஸ்ரீமடத்துல நடக்கற ஆராதனைல கலந்துக்கறவாளுக்கு சமைச்சுப் போடறதுல கிடைக்கற புண்ணியம் ,மன சந்தோஷத்துக்காகவுமே அவர் வருவார். பலகாலமா இப்படியே வந்துண்டு இருந்த அவருக்கு வயசு அதிகரிச்சுது. அதன் காரணமா ஆரம்பத்துல செஞ்ச மாதிரி பரபரன்னு இல்லாம, கொஞ்சம் மெதுவாகத்தான் அவரால சமைக்க முடிஞ்சுது.

பரமாசார்யா அனுகிரஹம் இருக்கற வரைக்கும் நான் வந்து சமைச்சுத் தருவேன்கறதுல உறுதியா இருந்தார். தொடர்ந்து பலவருஷங்களா இப்படிக் கலந்துண்ட அவருக்கு, ஒரு சமயம் மடத்துல பரமேஷ்டி குரு ஆராதனை நடந்த சமயத்துல மடத்தோட காரியதரிசி தகவலே சொல்லலை. அதனால அவருக்கு விஷயமே தெரியலை. அவர் வராமலே அந்த ஆராதனை முடிஞ்சுடுத்து.

அதை தொடர்ந்து மறுவாரமும் பரமேஷ்டி குருக்கள்ல இன்னொரு குருவுக்கு ஆராதனை வந்தது.இந்த நேரத்துல, அங்கே பக்தருக்கு மனசுல ஏதோ தோணியிருக்கு.வழக்கமா வருஷா வருஷம் இந்த சமயத்துலதானே ஆராதனை நடக்கும்.இந்த வருஷம் இன்னும் கூப்டவே இல்லையே. ஒரு வேளை நம்பளுக்கு கடுதாசி எதுவும் போட்டு அது கிடைக்காமப் போயிடுத்தோ என்னவோ தெரியலையே..எதுக்கும் பார்த்துட்டு வருவோம்னு அவராவே புறப்பட்டு வந்துட்டார்.

வந்தவர் இங்கே ஆராதனைக்கான ஏற்பாடுகள் நடந்துண்டு இருக்கறதைப் பார்த்ததும் மளமளன்னு வேலையில இறங்கிட்டார். மடத்து காரியதரிசிக்கு விஷயம் தெரிஞ்சுது. இருந்தாலும் வழக்கமா வர்றவர்ங்கறதால பேசாம இருந்துட்டார்.

அன்னிக்குத்தான் என்னிக்கும் இல்லாம ஒரு விஷயம், அன்னம் சமைக்கறச்சே நடந்தது. பரிசாரகருக்கு வயசாயிட்டதால, சாதத்தை சரியான பக்குவத்துல இறக்கி வடிக்க முடியலை.அதனால கொஞ்சம் குழைஞ்சுடுத்து. ;அடடா இப்படி ஆயிடுத்தே;ன்னு அவர் சங்கடப்பட்டுண்டு இருந்த சமயத்துல சரியா அங்கே வந்தார், மடத்தோட காரியதரிசி.

"இதுக்குதான் இந்த வருஷத்துலேர்ந்து உங்களைக் கூப்ட வேண்டாம்னு நினைச்சேன்.வயசு ஆயிடுத்து இல்லையா? இனிமே நீங்க ஒதுங்கிக்கறதுதான் நல்லது!" கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்.

அவ்வளவுதான் கண்கலங்கிடுத்து அந்த பக்தருக்கு."தப்புதான் கொஞ்சம் அசந்துட்டேன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல அவாள்ளாம் சாப்ட வரதுக்குள்ள பொலபொலன்னு பூமாதிரி சாதம் வடிச்சு வைச்சுடறேன்..!" தழுதழுப்பா சொன்னவர், அதே மாதிரி சீக்கிரமே சாதம் வடிச்சும் வைச்சுட்டார்

ஆச்சு.ஆராதனைக்கு இடையில எல்லாரும் போஜனம் பண்ணற நேரம் வந்தது. வேத வித்துக்கள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல வந்து பந்தியில உட்கார்ந்தா.எல்லாருக்கும் தலைவாழை இலைபோட்டு காய்கறியெல்லாம் பரிமாறிட்டு, அன்னம் பரிமாறத் தயாரானா மடத்துத் தொண்டர்கள்.அப்போதான் அங்கே ஒரு அதிசயம் நடந்தது. யாருமே எதிர்பார்க்காதபடி திடீர்னு அங்கே வந்தார் மகாபெரியவா

சாப்ட உட்கார்ந்திருந்தவா எல்லாரும் மரியாதைக்காக எழுந்திருக்க முயல, வேண்டாம்னு சைகையாலேயே தடுத்தார் ஆசார்யா. "எல்லாரும் திருப்தியா போஜனம் பண்ணுங்கோ"ன்னு சொன்ன மகாபெரியவா . .எல்லாருக்கும் பரிமாறத் தயாரா அன்னப் பாத்திரத்தை வைச்சுண்ட இருந்த தொண்டரைப் பார்த்தார்

"என்ன இது, பண்டிதாளுக்கு இப்படியா அன்னம் சமைக்கறது? ஒருத்தர் இலைல பரிமாறின சாதத்துல ஒரு பருக்கை மத்தவா இலைல விழறது கூட தப்பாச்சே.கொஞ்சம் குழைஞ்சுன்னா இருக்கணும்?"

சொன்ன மகாபெரியவா,மடத்தின் காரியதரிசியைப் பார்த்தார். "ஏன் நீ வழக்கமா வர்ற பரிசாரகருக்கு சொல்லலையோ?" தெரிஞ்சும் தெரியாதவர் மாதிரி கேட்டார்..

"இல்லை பெரியவா,அவர் பக்குவம் பண்ணின அன்னம் குழைஞ்சுடுத்துன்னு .." என்று முடிக்காமல் இழுத்தார் காரியதரிசி

"ஓஹோ!..அவருக்கு சாதம் வடிக்கற பக்குவம் தெரியாதுன்னு நீ சொல்லிக் குடுத்தியோ?"-மகாபெரியவா கேட்டதுல கொஞ்சம் எள்ளல் தொனிச்சுது.

அப்புறம் என்ன, தொண்டர்கள் உக்ராண அறைக்கு ஓடிப்போய், பக்தர் முதல்ல வடிச்ச குழஞ்ச சாதத்தை எடுத்துண்டு வந்து பரிமாறினா.

"சாதம்னா கொஞ்சம் குழைஞ்சு இருக்கணும் .அப்போதான் அது குழம்பு,ரசம்னு எல்லாத்தோடயும் பூரணமா சேரும்.அதோட இப்படிக் குழைஞ்சு இருந்தாத்தான் வயத்துக்கும் ஹிதம் புரிஞ்சுதா? இதெல்லாம் வழக்கமா பண்றவாளுக்குத் தெரியும்.நீ புதுசா பக்குவம் சொல்ல வேண்டாம்!"

உக்ராண அறையில் ஓரமா நின்னுண்டு இருந்த அந்த வயசான பரிசாரகருக்கு பரமாசார்யா பேசினது எல்லாமும் தெளிவா காதுல விழுந்தது.இப்போ ரெண்டாவது தடவையா அவரோட கண்ணுல ஜலம் நிரம்பித்து. இது ஆனந்தத்தால நிறைஞ்சதுன்னு சொல்லணுமா என்ன?

ஆராதனையெல்லாம் முடிஞ்சு அந்த பக்தர் புறப்படறச்சே மகாபெரியவா விசேஷமா ஒரு சால்வை போத்தச் சொல்லி, கொஞ்சம் கனிகளும் தாராளமான தட்சணையும் குடுத்து ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார். அதுக்கு அப்புறமும் பலகாலம் மடத்துக்கு வந்து தொண்டு செஞ்சார் அந்த பக்தர்.

பக்குவம் வந்தா தானா குழைவு வரும். குழைஞ்சா வாழ்க்கைல எல்லாத்தோடயும் சகஜமா ஒத்துப் போயிடலாம். இது சாதத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கையின் சாரத்துக்கும் இதுதான் அடிப்படை...!
மகாபெரியவா இந்த அற்புதத்தை நடத்தி சொல்லாமச் சொன்ன இந்தத் தத்துவம் காரியதரிசிக்கு மட்டுமல்லாம அங்கே இருந்த வேதவித்துகள் எல்லாருக்குமே தெளிவா புரிஞ்சுது

No comments:

Post a Comment