Saturday, March 16, 2019

சந்த்ராஷ்டமம் அன்று உங்களுக்கு வரும் பிரச்சினை மற்றும் பரிஹாரமும்

*சந்திராஷ்டமம் என்றால் என்ன?*

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சார ரீதியாக சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது  ராசிக்கு எட்டாம் ராசியில் வரக்கூடிய இரண்டு முழு நட்சத்திர தினங்களும், மூன்றாம் நட்சத்திரத்தில் இரண்டு பாதங்களுமாக மொத்தம் இரண்டே கால் நாட்கள் சந்திராஷ்டமம்  இருக்கும். உதாரணமாக ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்

அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.

சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். ராசியின் எட்டாவது இடத்திற்கு சந்திரன் வரும் போது அந்த ராசியில் மறைகிறது. எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

*சந்திராஷ்டமத்தால் யாருக்கு கெடுதல்?*

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம்.

1. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது.

2.சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.

3.ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது.

4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

5. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை.

6. ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனைஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படித்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன

*சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.*

மேஷ ராசி அன்பர்களுக்கு விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆகும். எனவே மேஷ ராசி அன்பர்களுக்கு சந்திராஷ்டம ராசி விருச்சிகம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் இடம் பெறும் தனுசு ராசியில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

மிதுன ராசி அன்பர்களுக்கு மகரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

கடக ராசி அன்பர்களுக்கு கும்பத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

சிம்ம ராசி அன்பர்களுக்கு மீனத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

கன்னி ராசி அன்பர்களுக்கு மேஷத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

துலாம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ரிஷபத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு மிதுனத்தில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

தனுசு ராசி அன்பர்களுக்கு கடக ராசியில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

மகர ராசி அன்பர்களுக்கு சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

கும்ப ராசி அன்பர்களுக்கு கன்னி ராசியில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

மீனராசியைச் சேர்ந்தவர்களுக்கு துலாம் ராசியில் சந்திரன் இருக்கும் தினங்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

*தீர்வுகள்*

மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் சந்திராஷ்டம காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், வெறுப்பு, மனபதட்டம், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் வாகன பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.
இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று.

மனதை ஒருமுகப்படுத்தும் யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். சிக்கலான பிரச்சனைகளை அன்றைய தினம் பேசாமல் இருப்பது அதில் அன்றைய தினம் முடிவு எடுக்காமல் இருப்பது, பிரச்சனைக்குரிய விஷயங்களில் அன்று தலையிடாமல் இருப்பது, விவாதிக்காமல் இருப்பது போன்றவைகளை கடைபிடிப்பது மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிர்க்கலாம்.

*பரிகாரங்கள்:*

சந்திராஷ்டம நாள் வரும்போது தவிர்க்க முடியாத ஏதாவது ஒரு முக்கிய காரியங்களை செய்ய வேண்டி இருந்தால் அன்று காலையில் குளிக்கும் போது தயிர், மற்றும் கஸ்தூரி மஞ்சளை கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்துவிட்டு பின்வரும் பரிகாரங்களை செய்து விட்டு அந்த முக்கிய வேலையை செய்தால் சந்திராஷ்ட்ரமம் வேலை செய்யாது.

1. சந்திராஷ்டம தினத்தில் குருவின் அம்ச ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.

2. விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

3. சந்திராஷ்டம தினத்தில் பால் திரிவது, சாதம் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது, வெண்ணிற ஆடையில் அசுத்தம் மற்றும் கரை படுவது போன்றவை இயற்கையாக நேர்ந்துவிட்டால் சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

4. திரிந்த பாலில் செய்யப்படும் ரசகுல்லா போன்ற இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

5. குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

6. சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும்,  இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.

7. சந்திராஷ்டம தினத்தில் சந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யலாம். வெண்ணிற ஆடையை சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு தரலாம்.இதனால் சந்திராஷ்டமத்தில் அக்காரியத்தை செய்வதால் ஏற்படும் தோஷம், தடை, பிரச்சனை,இழப்பு, துன்பம்,மன உளைச்சல் நீங்கும்.

No comments:

Post a Comment