Saturday, March 16, 2019

பிச்சை காரனால் தான் உங்களுக்கு பணக்கார பாக்கியம் கிடைக்கும்

உங்கள் வீட்டில் அன்னத்துக்கும் ஐஸ்வரியத்துக்கும் ஒருபோதும் பஞ்சம் வராமல் இருக்க வேண்டுமா?அப்படியென்றால் இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

கடவுளான சிவபெருமானையே தன் தோழனாகக் கொண்ட சுந்தரர் பெருமானுக்கு சிவபெருமானே வீடுவீடாகச் சென்று யாசகம் கேட்ட தலமான  திருக்கச்சூரில் வருடந்தோறும் மாசி மாதத்தில் விமரிசையாக ஈசனுக்கு விருந்திட்ட விழா  நடைபெற்று வருகிறது.

அதென்ன விருந்திட்ட விழா  என நீங்கள் யோசிப்பது புரிகிறது.

இதன் தொடர்பாக சுந்தரர் பெருமானுக்கு சிவபெருமானே வீடுவீடாகச் சென்று யாசகம் கேட்டு உணவு வழங்கிய கதையை பார்ப்போமா!

நாமெல்லாம் கடவுளை, கடவுளாகப் பார்க்கிறோம். ஆனால் சுந்தரர் பெருமான், கடவுளான சிவபெருமானையே தன் தோழனாகக் கொண்டவர். அப்படியொரு தோழமை சிவனாருக்கும் சுந்தரருக்கும் உண்டு என்பதெல்லாம் நாம் அறிந்ததுதானே!

ஆரூரில் இருந்து அப்படியே கிளம்பி வந்தார் சுந்தரர். வழியெல்லாம் பல தலங்கள். எல்லாத் தலங்களிலும் கண்குளிர சிவனாரை, சிவலிங்கத்தை தரிசித்தபடியே வந்தார்.

சோழதேசத்தில் இருந்து கிளம்பியவர், நடுநாட்டையெல்லாம் கடந்து, தொண்டை நாட்டையும் வந்தடைந்தார். நல்ல வெயில். கொளுத்தியெடுத்த வெயில், காலையும் பதம் பார்த்தது. தலையையும் தாக்கியது.

ஒருபக்கம் வெயிலின் உக்கிரம் என்றால்... இன்னொரு பக்கம் பசி. இரண்டும் கலந்து சோர்வையும் அயர்ச்சியையும் கொடுத்தன. சாப்பிட்டால் தெம்பு கிடைக்கும். சாப்பிட உணவு வேண்டுமே. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு. சிவனின் தொண்டனான நாம், சாப்பிட்டுக் கொஞ்சம் தூங்கினால், அசதியெல்லாம் பறந்துவிடும். அயர்ச்சியெல்லாம் ஓடிவிடும் என நினைத்தபடியே மரத்தடி ஒன்றில் அப்படியே சாய்ந்தார்.

அந்த சமயம்... அங்கே பெரியவர் ஒருவர் சுந்தரரிடம் வந்தார். ‘என்னப்பா ஆச்சு... என்ன வேணும்’ என்று கேட்டார். கிட்டத்தட்ட மயக்கத்தில் கண்கள் செருகியிருந்தன. லேசாகத் திறந்து பார்த்த சுந்தரர், அந்தப் பெரியவரிடம்... ‘பசி... பசி...’ என அரற்றினார்.

அப்படியா... பசிக்கிறதா. ஆமாம் நீங்கள் யார்? என்று பெரியவர் கேட்டார். சுந்தரர் என்று தன்பெயரைச் சொன்னார். உடனே பெரியவர்... ஓ... சுந்தரரா நீங்கள். சிவபெருமானைத் தெரிந்தவருக்கெல்லாம் உங்களைத் தெரிந்திருக்கும் என்பார்களே! சரி சரி... இங்கேயே இருங்கள். உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார் பெரியவர்.

கையில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்ட பெரியவர், அங்கிருந்த வீடுகளுக்குச் சென்றார். வாசலில் நின்றார். ‘சுந்தரருக்கு சாதம் கொடுங்க...’, ‘சுந்தரருக்கு சாதம் போடுங்க’ என்று ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் கேட்டார்.

அந்த உணவையெல்லாம் பெற்றுக் கொண்டு, தள்ளாத வயதிலும் குடுகுடுவென ஓடிவந்தார் கிழவர். சுந்தரருக்கு உணவை வழங்கினார். சுந்தரர் சாப்பிட்டார். உணவு உள்ளே செல்லச் செல்ல, கண்களில் ஒளி வந்தன. உடம்பெங்கும் தெம்பு பரவியது.

அந்தப் பெரியவரைப் பார்த்த சுந்தரர்... ‘ஐயோ பாவம்... யார் தாத்தா நீங்கள். இந்தத் தள்ளாத வயதில் எனக்காக அங்கேயும் இங்கேயுமாக ஓடி, ஒவ்வொரு வீடாகச் சென்று சாதம் வாங்கித் தந்து உயிரூட்டியிருக்கிறீர்களே. மிக்க நன்றி ஐயா. ஆமாம், நீங்கள் யார்?” என்று கேட்டார்.

அந்தப் பெரியவர் சிரித்தார். சுந்தரரையே உற்றுப் பார்த்தார். உரக்கச் சிரித்தார்.‘உங்கள் தோழனான என்னை  தெரியவில்லையா சுந்தரா? என்று சொல்லியபடி, தன் சுயரூபத்தைக் காட்டினார். அங்கே, சிவபார்வதியுடன் ரிஷபாரூடராகக் காட்சி தந்தருளினார் சிவனார்.

சுந்தரர் வியந்தார். நெகிழ்ந்தார். மகிழ்ந்தார். நெக்குருகிப் போனார். ’என் சிவமே... என் சிவமே... என் சிவமே...’ என்று விழுந்து நமஸ்கரித்தார். ‘எனக்காக நீ யாசகம் கேட்டாயா. யாசகம் கேட்டது நீயா. என் சிவமே...’ என்று கண்களில் நீர் கசிய, சிவனாரைத் தொழுதார்.

இப்படி சுந்தரருக்காக, சிவபெருமான் வீடுவீடாகச் சென்று யாசகம் கேட்டு உணவு வழங்கிய ஈசனுக்கு விருந்திட்ட சிவன் என்ற திருநாமமும் ,
ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் விமரிசையாக ஈசனுக்கு விருந்திட்ட விழாவும் திருக்கச்சூர் என்ற தலத்தில் நடைபெற்று வருகிறது

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர்.

இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கச்சூர். அதேபோல் சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர்.

இந்தத் திருக்கச்சூரில், ஊருக்கு நடுவே பிரமாண்டமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

அந்தக் காலத்தில் ஆலக்கோயில் என்று அழைக்கப்பட்டு, பிறகு திருக்கச்சூர் என்றாகியிருக்கிறது.

சிவனாரின் திருநாமம் கச்சபேஸ்வரர். உத்ஸவரின் திருநாமம் தியாகராஜ சுவாமி.

அழகான இந்த ஆலயத்தில்... இன்னொரு விசேஷமும் உண்டு. சுந்தரர் பசியுடன் இருந்த போது, யாசகம் கேட்டு உணவு வாங்கி வந்து, அவருக்கு சிவபெருமான் பசியாற்றிய இடம்... கோயிலுக்குள்ளே இருக்கிறது.

இங்கே தனி சந்நிதியில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கு... விருந்திட்ட சிவன் என்றே திருநாமம்!

வருடந்தோறும் மாசி மாதத்தில் விருந்திட்ட ஈசனுக்கு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.

இந்த வருடம் (2019) 18 ஆம் ஆண்டு விருந்திட்ட விழா ஞாயிற்றுக்கிழமை 24ம் தேதி காலையில் இருந்தே தொடங்குகிறது .

பக்தர்களால், அன்னதானம், நீர் மோர் என அமர்க்களப்படும்
இந்த விழாவில் கலந்துகொண்டு சிவதரிசனம் செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் அன்னத்துக்கும் ஐஸ்வரியத்துக்கும் ஒருபோதும் பஞ்சம் வராது என்பது கண்கூடாக உணர்வீர்கள்

அப்புறம் ஒரு விஷயம்,நாளை ஞாயிற்றுக்கிழமை 24ம் தேதி விருந்திட்ட விழா திருக்கச்சூரில் நடைபெறம் இந்த நாளில் யாரேனும் பசி என்று கைநீட்டி உங்களிடம் யாசகம் கேட்டால் ஏதேனும் வழங்குங்கள்.

ஏனென்றால் உங்களிடம் வந்து யாசகம் கேட்பது சிவனாகக் கூட இருக்கலாம்!👇👇

No comments:

Post a Comment