Wednesday, March 6, 2019

அங்காள பரமேஷ்வரி அம்மனின் உண்மை வரலாறு

ஆன்மிகம்
அசுர சக்திகளை அடித்துவிரட்டும் அங்காள பரமேஸ்வரியின் மயானக்கொள்ளை
"அங்காளியே ஆடி வரவேணுமம்மா..
ஆதிபராசக்தியே ஓடி வரவேணுமம்மா..
மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்
ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்
ஏழு கரகமம்மா எடுத்தாடும் விற்கரகம்
பத்துக் கரகமம்மா பதிந்தாடும் பசுங்கரகம்
வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளையாடிவர
ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா
பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா..."
பம்பையும் உடுக்கையும் துள்ளித் துள்ளி இசை எழுப்பி வர, ஆவேசம் கொண்ட சாமியாடிகள் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள். அருகே கரகம் சுமந்தவர்களும், கடவுளர் வேடமிட்டவர்களும் மெள்ள ஆடிக்கொண்டிருந்தார்கள். சுற்றிலும் நின்றுகொண்டிருந்த பக்தர்கள், சாமியாடிகள் பாதத்தில், மஞ்சள் நீர் ஊற்றி, தீபம் காட்டி வணங்கி நின்றார்கள். அம்மனின் அருள்வாக்கைக் கேட்டும், வேண்டுதல்களை நிறைவேற்ற மடிப்பிச்சை எடுத்தும் கடந்துகொண்டிருந்த அந்தக் கூட்டம்கூட ஆடி ஆடி சென்றுகொண்டிருந்தது. ஆம், அது மயானக்கொள்ளை திருவிழா கூட்டம்தான்.
ஏழை எளிய மக்களின் கொண்டாட்டத் திருவிழா என்றால் அது மயானக் கொள்ளை விழாதான். அங்களாபரமேஸ்வரியின் ஆர்ப்பாட்டமான விழா என்றாலும், அந்த விழாதான் பாமர மக்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஒரு மகத்தான விழா. மரத்தில் காய் காய்க்காவிட்டாலும், பிள்ளை வரம் இல்லாவிட்டாலும், திருஷ்டி, தீர்க்க முடியாத நோய்கள் தீர்க்கவும் எளிய மக்கள் ஓடிவருவது இந்த விழாவுக்குத்தான்.
மயானக்கொள்ளை சூறை என்பது இந்த விழாவின் சிறப்பம்சம். வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் நிறைவேறினால் பழங்கள், காய்கள், மஞ்சள், கொழுக்கட்டை, கீரை, பிஸ்கட், சாக்லெட், வளையல் எனப் பல பொருள்களைக் கொண்டு வரும் பக்தர்கள், அதை மக்கள் கூட்டத்துக்கு நடுவே வீசி இறைப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் மயானத்தில் அங்காளியாய் ஆடிவரும் சாமியாடிகள், சுடுகாட்டு மண்ணால் செய்யப்பட்ட உருவத்தைக் கலைத்து, அதனுள் வைக்கப்பட்டிருக்கும் ஆட்டின் மாமிசம், குடல் போன்றவற்றை வாயால் கடித்து இழுத்து வீசுவார்கள். இதுவே மயானக்கொள்ளை சூறை எனப்படுகிறது. இங்கு கொள்ளை என்றால் பறிப்பது என்று பொருள் இல்லை. காளிதேவி அசுரசக்திகளை விரட்டுவது என்றே பொருள்.
அங்காளியம்மனுக்காக நேர்ந்து கொள்பவர்களும், கரகம் எடுப்பவர்களும் 40 நாள்களுக்கு முன்னரே விரதமிருக்கத் தொடங்குவார்கள். மஞ்சள் ஆடை உடுத்தி, காப்பு கட்டிக்கொள்வார்கள். சிவராத்திரியை அடுத்து வரும் அமாவாசை தினத்தில் சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும் அங்காளியம்மன் கோயிலிலிருந்து ஆடல், பாடல், இசையோடு ஊர்வலமாகச் சுடுகாட்டை நோக்கி சூறையாடக் கிளம்புவார்கள். அங்காளியம்மனோடு சிவன், கருப்பணசாமி, சுடலை, பத்ரகாளி, காட்டேரி, பேய்ச்சி போன்ற பல உருவங்களைத் தாங்கிய சாமியாடிகளும் உடன் செல்வார்கள். பெரிய பல்லக்கில் அங்காளியம்மன் திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும். தெருத்தெருவாக ஊர்ந்து செல்லும் இந்தக் கூட்டத்தை எல்லோரும் ஆச்சர்யமாகவும், சற்று அச்சத்துடனும் பார்த்து வணங்குவார்கள். நள்ளிரவை எட்டும் நேரத்தில் எல்லோரும் சுடுகாட்டுக்குள் சென்று ஆவேசமாக ஆடி, சுடுகாட்டு உருவாரத்தைக் களைத்து அருள்வாக்கு சொல்வார்கள். அங்கு வந்த எல்லோரும் அந்தச் சுடுகாட்டுச் சாம்பலை ஒரு துணியில் கட்டி எடுத்துக்கொள்வார்கள். அந்த மண்ணை வீட்டு வாசலில் கட்டினால், தீய சக்திகள் அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த மயானக்கொள்ளை அங்காளியம்மனின் புராணக் கதையை மட்டும் சார்ந்தது இல்லை. இந்த விழாவே இறந்தவர்களை நினைக்கும் உருக்கமான திருவிழாவாகவும் இருக்கிறது. இறந்துபோன தங்களது உறவுகளை எண்ணி, ஒவ்வொரு குடும்பத்தினரும் அன்று சுடுகாட்டுக்குச் செல்வார்கள். இறந்தவர்களுக்கு விருப்பமான பண்டங்களை படையலாகப் போட்டு வணங்குவார்கள். பெண்கள் கூடி அமர்ந்து, உறவினர்களைப் புதைத்த இடத்தில் ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஓராண்டுக்குள் இறந்த உறவுகளுக்குப் படையல் வைக்க வருபவர்கள் அங்கிருக்கும் ஹரிச்சந்திரனுக்கு முதல் படையல் வைத்து வணங்கிவிட்டே உள்ளே செல்வார்கள். அநித்யமான இந்த வாழ்க்கையில் பழுத்தோலைகள் மட்டுமல்ல, சிலசமயம் பச்சையோலைகளும் விழுந்துவிடுகின்றன. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவியர் இப்படி எங்கு நோக்கினாலும் அவர்களின் கதறல் ஓசைகள் நெஞ்சை கரையச் செய்துவிடும்.
வேண்டுதல் நிறைவேற்றும் விழா, இறந்தவர்களை நினைவுகூரும் விழா இதெல்லாம் சரி.. அங்காளம்மனுக்கான இந்த விழா இவ்வளவு ஆக்ரோஷமாக நடத்தப்படுவது ஏன்?
இந்தக் கேள்விக்கு விடையாக, சில புராணக்கதைகள் தமிழகமெங்கும் சொல்லப்படுகின்றன. தட்சனின் யாகத்தில் விழுந்த தாட்சாயினி ஆக்ரோஷ ரூபம் கொண்டு எழுந்த வடிவமே அங்காளம்மன் என்றும், அவளை அடக்கி ஆண்டுக்கொருமுறை மட்டும் விடுவித்து மயானத்தை சூறையாட சிவன் அனுமதித்தார் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
பிரம்மனின் ஆணவத்தை அடக்க சதாசிவன் அவரின் ஒரு தலையைக் கொய்துவிட, அந்தத் தலை சிவனாரின் கரத்தில் ஒட்டிக்கொண்டு அவரைப் பிச்சாடனாராக மாற்றியது. அப்போது அன்னபூரணியாக உருவெடுத்த சக்தியே பிக்ஷை அளித்து சிவபெருமானின் தோஷம் நீக்கினாள் என்றும் அன்னபூரணியின் அம்சமே அங்காளியம்மன் என்றும் ஒரு கதை உண்டு.
பிரம்மனின் தலையைக் கொய்தபோது சக்திதேவி அதைத் தடுக்காததால், கோபம் கொண்ட சரஸ்வதி, சக்தியை சபித்து, 'பிச்சியாக, பேயுருவாக, கோழி இறக்கைகள் கொண்ட உடை அணிந்து மயானம் காக்க போ!' என்று சபித்தாராம். அதன்படியே அன்னை சக்தி மயானக்காளியாக உருமாறி அலைந்தாள் என்றும், அவளை மாசிமாத அமாவாசையில் ஈசன் உருமாற்றினார் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
காசி அன்னபூரணி அங்காளியம்மனின் அம்சமே. மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே. அங்கத்தில் கோர ரூபமாக இருப்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பட்டாள் அன்னை. சிவனின் கரத்திலிருந்த கபாலத்தை அடித்து நொறுக்கி ஆவேச நடனமிட்ட இடம் மேல்மலையனூர் எனப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மயானக்கொள்ளை விழா சிறப்பாக நடந்தாலும், மேல்மலையனூரில் மிகவும் சிறப்பான முறையில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும்கூட மயானக்கொள்ளை விழா கொண்டாடப்படுகிறது.
மாசி அமாவாசை அன்று சக்தியின் ஆவேச வடிவமான அங்காளி பரிபூரண சக்தியோடும், திறனோடும் இருப்பாள் என்கின்றன புராணங்கள். சகலருக்கும் சக்தி தரும் அங்காளியம்மன் அந்த நாளில்தான் தனது பிள்ளைகளான ஜீவராசிகளைப் பாதுகாக்க திருவுள்ளம் கொண்டு, தீயசக்திகளை அழிக்கிறாள். இறந்த ஆன்மாக்களுக்கு அன்னை சக்தி உணவளிக்கும் விழா இது என்று சொல்லப்பட்டாலும், இது ஏழை எளிய மக்களின் படையல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.   மாலை இந்தத் திருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. சதுர்யுகங்களுக்கும் முற்பட்ட யுகமான மணியுகத்திற்கும் முன்பே தோன்றிய அங்காளியம்மனின் அருளால், நம்மைச் சூழ்ந்திருக்கும் எல்லாத் தீமைகளும் விலகி, நாளும் நலமே சூழ பிரார்த்திப்போம்
ச.வெங்கடேசன்...

No comments:

Post a Comment