Wednesday, March 6, 2019

ஶ்ரீமத் கர்க பாகவதத்தில் வரும் ராதா ருக்மணி க்ருஷ்ணண் கதை

#மாமாயன்

ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது.பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மணி.

யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.

அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.

அவள் நித்யம் இரண்டு படி பாலைச் சுண்டக் காய்ச்சி பரிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான்.

அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள் தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. அவள் பால் சாப்பிட்டால் இவனுக்கு தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி ருக்மணி பிராட்டி கிடுகிடுவென்று ஒரு பசுவைத் தானே கறந்தாள்.பரிமள திரவியங்கள் போட்டு பாலைக் காய்ச்சினாள். தானே படகைச் செலுத்திக்கொண்டு அக்கரைக்குப் போனாள். ராதிகா என்ற பக்தையின் குடிசைக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராதிகா,எதிரே மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்து ப்ரமித்துப் போனாள்.

கையில் பாலைக் கொடுத்தவுடன், பாலைப் பருகினாள்.பாத்திரத்தை வாங்கிக் கொணடு வந்துவிட்டாள் ருக்மணி. 'நித்திரை போவான் போல யோகு செய்யும் பிரான்' பரமாத்மா. தலையோடு கால் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். ருக்மணி வருவதைப் பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டான்.
பரமாத்மா தூங்கிவிட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி, அவன் திருவடியைத் தொட்டு வணங்க வேண்டும் என்று போர்வையை நீக்கி திருவடியைப் பார்த்தாள்.

இது கர்க பாகவத்தில் சொல்லப்பட்ட சரித்திரம். வடதேசத்தில் இதை நித்யம் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு.

திருவடியில் பார்த்தால் ஒரே கொப்புளங்கள்.பகவானை எழுப்பினாள் ருக்மணி.பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது. காலையிலிருந்து வெளியில் எங்கும் போகவும் இல்லை. இப்படி திருவடியில் அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? என்று கேட்டாள்.

ராதிகா பால் பருகினாள் அல்லவா!அதனால்தான்! என்றான் பரமாத்மா.

ராதிகா பால் பருகியதற்கும், கால் கொப்புளித்ததற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.

நீ சுடச் சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப் பார்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள். அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.

இதைக் கேட்ட ருக்மணி சிரித்துவிட்டாள். சுடச்சுட பாலைப் பருகினாள் என்றால் அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப் போகவேண்டும். தங்கள் திருவடி ஏன் கொப்புளித்தது? என்று கேட்டாள்.

பகவான் சிரித்துக் கொண்டே சொன்னான்.'அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடிதானே!பால் சுடச்சுட என் திருவடியில்தானே விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான ருக்மணி தாயார் நடுங்கிவிட்டாள். ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே தெரியாத பக்தி ராதிகாவின் பக்தி. அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான் என்றால் இது 'மாமாயத்வம்' இல்லாமல் வேறு என்ன!ருக்மிணியையே ப்ரமிக்க வைத்து பக்தர்களின் உயர்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும் பேசுவான். எதையும் சாஸ்திரார்த்தமாக்குவான்.தன் வாக்கை நிர்த்தாரணம் பண்ணக்கூடியவன்; உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன்.. அதனால் மாமாயன்... !!

❤ ராதே க்ருஷ்ணா ❤

No comments:

Post a Comment