Monday, July 29, 2019

முருகன் மற்றும் சுப்பிரமணிய ஸ்வாமி ஒன்றா ?வெவ்வேறா?

முருகனும் ஸுப்ரமண்யரும் ஒருவரே!
சுகி .சிவத்தின் கருத்துக்கு மறுப்புரை
- சந்த்ரு ராஜமூர்த்தி @ vaidika saivan

“தமிழர் வழிபட்ட முருகனும் வடநாட்டில் வழிபடப்பட்ட ஸுப்ரஹ்மண்யரும் இரு வேறு கடவுளர்கள்.பிற்காலத்தில் ஒருவராக ஆக்கப்பட்டனர்” என்ற கருத்தை  “சொல்வேந்தர்” சுகி.சிவம் முன்வைத்திருக்கிறார்.
நடுநிலையான மனப்பாங்குடன்,
தமிழரின் மிக தொன்மையான சங்க இலக்கியங்கில் குறிப்பிடப்பட்டுள்ள முருகனின் தொன்மங்களை வடமொழி நூல்களில் உள்ள ஸுப்ரஹ்மண்யரின் சரிதங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் இவரின் கூற்று உண்மையா அல்லது பட்டவர்த்தமான புளுகா என்பது புலப்படும்.

தமிழரின் தனிக்கடவுளான முருகனின் திருவவதார வரலாறு பரிபாடலில் விரிவாகப் பேசப்படுகிறது:

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்

உமையடு புணர்ந்து, காம வதுவையுள்,

அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி

இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு, 30

‘விலங்கு‘ என, விண்னோர் வேள்வி முதல்வன்

விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது

அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,

எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு

திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள; 35

கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை

நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,

வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,

‘மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,

சாலார்; தானே தரிக்க என, அவர் அவி 40

உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்

தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,

வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்

கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,

அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்; 45

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்

நிறைவயின் வழா அது நிற் சூலினரே;

நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்

பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50

ஈசனுக்கும் உமைக்கும் பிறக்கும் குழந்தை,  பேராற்றல் மிக்கதாக விளங்கக்கூடும் என்பதனை  உணர்ந்த இந்திரன் ஈசனிடம் வேண்ட,ஈசனும் அந்தக்  கருவை நீக்கி,அது ஆறு பாகங்களாக பிரிக்கப்பட்டு ரிஷிகளின் மூலம்,அருந்ததியைத்  தவிர்த்த ஆறு ரிஷிபத்னிகளின் கர்ப்பத்தில் செலுத்தப்படுகிறது.அவர்கள் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப் பூவாகிய பாயலில் குழந்தையை ஈன்றனர்.பிறந்த குழந்தையை அழிக்க எண்ணி இந்திரன் வஜ்ரத்தால் தாக்கியபோது ஆறு குழந்தைகளும் ஓர் உருவாயின.

ஈசனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையின் பேராற்றலை எண்ணி அச்சங்கொண்டு ,இந்திராதி தேவர்கள் பரமேஸ்வரனிடம் அவர் தேஜஸை வெளிப்படுத்தாமல் தன்னுளேயே  நிலைபெறச் செய்யுமாறு தேவர்கள் வேண்டிய வரலாறு வால்மீகி ராமாயணத்தின் பால கண்டத்தின் 36 வது சர்க்கத்தில் உள்ளது:

அபிகம்ய ஸுரா: ஸர்வே ப்ரணிபத்ய இதம் அப்ருவன் |
தேவ தேவ மஹாதேவ லோகஸ்ய அஸ்ய ஹிதே ரத ||
ஸுராணாம் ப்ரணிபாடென ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி |
ந லோகா தாரயிஷ்யந்தி தவ தேஜ: ஸுரோத்தம|
ப்ராஹ்மேண தபஸா யுக்தோ தேவ்யா ஸஹ தப: சர ||
த்ரைலோக்ய ஹித காமார்த்தம் தேஜ: தேஜஸி தாரய|
ரக்ஷா ஸர்வான் இமான் லோகான் ந அலோகம் கர்த்தும் அர்ஹஸி || 1.36.8-11

இந்த வரலாறு மஹாபாரதத்தின் அனுஷாசன பர்வத்தின் 84 வது அத்தியாயத்திலும் உள்ளது.

ரிஷிபத்னிகள் சிவ தேஜஸை பெற்றுக்கொள்ளும் செய்தி ஸ்கந்த புராணத்தின் மஹேஸ்வர கண்டத்தின் கௌமாரிக கண்டத்தின் 29 வது
அத்தியாயத்தில் உள்ளது.ஸ்கந்த ஜனனத்தில் அருந்ததியை   தவிர்த்த ஆறு ரிஷிபத்தினிகளின் சம்பந்தம் இருக்கும் குறிப்பு மஹாபாரதத்தின் வன பர்வத்தின் 223 வது அத்தியாயத்தில் உள்ளது.இந்திரனுடன் முருகன் போர் புரிந்த வரலாறு வன பர்வத்தின் 226 வது அத்தியாயத்தில் உள்ளது.

அக்னிதேவன் இந்திரனை வென்ற முருகனுக்கு,  கொடியாக திகழ்வதற்காக ஒரு கோழிச்சேவலைப் பரிசளித்தான் என்று பரிபாடல் தரும் குறிப்பு (அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,செல்வ வாரணம் கொடுத்தோன்) மஹாபாரதத்தின் வன பர்வத்தின் 228 வது அத்தியாயத்தில் உள்ளது.

தேவர்கள் கந்தனுக்கு பலவித பரிசுகளை அளித்த வரலாறு ஸ்கந்த புராணம்(1.2.30),மத்ஸ்ய புராணம்(2.3),ப்ரஹ்மாண்ட புராணம்(5.1.3),வாயு புராணம்(3.3.10) முதலிய புராணங்களில் காணப்படுகின்றது.

பரிபாடல்(8.29,19.29,19.26,102-103) மற்றும் திருமுருகாற்றுப்படையில்(266) குறிப்பிடப்பட்டுள்ள கந்தன் க்ரௌஞ்சமலையை பிளந்த வரலாறு மஹாபாரதம் ( வன பர்வம்),வாமன புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தில் உள்ளது.

புறநானுறு (23.3-7) ,பதிற்றுப்பத்து (11.56) ,பெரும்பாணாற்றுப்படை (456-460), குறுந்தொகை (1:2) ,கலித்தொகை (27:15-16;96:25-27) ,பரிபாடல் (1:5,8:70, 14:18, 18:3-4, 19.101) முதலியவற்றில் முருகன் சூரனை வென்ற குறிப்பு உள்ளது.சூரனுடன் முருகன் புரிந்த போர் மிக விரிவாக வடமொழி ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தின் யுத்த காண்டத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.சூரன் மற்றும் அவனது தம்பியரின் வரலாறுகள் அதே புராணத்தின் அசுர காண்டத்தில் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது.

பரிபாடலில் வரும்  இந்த வரலாறு வால்மீகி ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் வரும் ஸ்கந்தனின் சரிதையை அடிப்டையாகக் கொண்டே  பாடப்பெற்றுள்ளது என்று சந்தேகமின்றி நிரூபணமாகிறது.

“ஸுப்ரஹ்மண்யன் என்றால் ப்ராஹ்மண தர்மத்தை விசேஷமாக ரக்ஷிக்கின்றவன் என்று
பொருள். அவர் எப்படி தமிழ் கடவுளாக இருப்பாரு?எப்படி குறத்தியை கல்யாணம் பண்ணிக்குவாரு?”என்று கேள்வி எழுப்புகிறார்.
இவர் மட்டும் அல்ல.ஆராய்ச்சியாளர்கள் என்றப் பெயரில் உள்ள பலரும் வள்ளியை முருகன் மணந்த வரலாறு தமிழ் நூல்களில் மட்டும்தான் உள்ளது,அது தமிழரின் மரபு வழி வந்த ஒரு கதையன்றி வடமொழி புராணங்களில் வள்ளி என்ற கதாபாத்திரமே இல்லை என்று முடிவுகட்டிவிடுகிறார்கள்.அது முற்றிலும் தவறு.

வடமொழியில் வியாசர் இயற்றிய பதினெட்டு மஹாபுராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்யகண்டத்தில் தேவ காண்டத்தில் 3 வது அத்தியாயத்தில்வள்ளியின் பிறப்பு,அவள் நம்பிராஜனால் வளர்க்கப்படுதல்,ஸ்கந்தன் வேடனாகவும் விருத்தனாகவும் வந்து அவளை ஆட்கொள்ளுதல் முதலிய அனைத்து வரலாறுகளும் விஸ்தாரமாக விவரிக்கப்பட்டுள்ளன.

வ்யாதவேஷம் க்ருஹீத்வாத நிரகாத் ஷண்முகஸ் ததா |
சமாகத்ய ஜவேநாயம் லவலீ நாயிகாந்திகம் ||
காத்வம் பாலே சுதா கஸ்ய கிந்நாமதே க்வவா
ஜநி : |  40-41

அப்பொழுது ஸ்ரீ ஷண்முகரும் வேட வடிவம் தரித்து வேகமாய் வள்ளியின் சமீபம் சென்று,”ஓ குழந்தாய் நீ யார் ? யாருடைய பெண்?உன் பெயர் என்ன? நீ எங்கு பிறந்தாய்?”என்று பலவாறாக வினவினார்.

ததாநீம் ஷண்முகோ ஜ்யேஷ்டம் கஜ வக்த்ரமசிந்தயத் |
சது கந்த த்விபாகார: மஹாவேகென நிர்யயௌ||
தம் த்ருஷ்ட்வா கஜமல்லம்ஸா பீத பீதா மஹாஜவாத் |
ஆகத்ய வ்ருத்தமாலிங்கிய த்வதுக்தம் தச்ருணோம்யஹம் || 74-75

அந்த சமயத்தில் ஷண்முகரானவர் தன் தமையனாகிய கணபதியை நினைத்தார்.கணேசரும் மதங்கொண்ட யானையின் வடிவோடு அந்த இடத்திற்கு மிகவும்
வேகமாக வந்தார்.வள்ளியானவள் அந்த யானையைக் கண்டு மிகவும் பயம்கொண்டு மிக வேகமாக ஓடிவந்து  கிழவரைக் கட்டிக்கொண்டாள்,”நான் தாங்கள் சொல்வதை கேட்கிறேன்!” என்றாள்.

இந்த வடமொழி ஸ்கந்த புராணத்தின் ஒரு பகுதியைத் தான் கச்சியப்பர் தமிழில் கந்த புராணம் என்று பாடினார்.

தமிழ் இலக்கியங்களில் கூறப்படும்  முருகனின் அனைத்து தொன்மங்களும் வடமொழி  நூல்களிலும் காணப்படுகின்றன.வடமொழிநூல்களில் கூறப்படாத தனித்துவமான வரலாறோ குணாதிசயமோ முருகனுக்குத்  தமிழ் இலக்கியங்களில் எங்குமே கூறப்படவில்லை.

இவற்றிலிருந்து, பண்டையத் தமிழர்கள் வழிபட்ட குறிஞ்சி நிலக் கடவுளான சேயோன் முருகனும் வடமொழி நூல்கள் போற்றும் ஸுப்ரமண்யரும் ஒருவரே என்பது கையிலங்கு கனிபோல் தெள்ளத் தெளிவாக புலனாகிறது.
read watch and share to others

No comments:

Post a Comment