Saturday, August 31, 2019

பிள்ளையார் சதுர்த்தி

“#பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் !!!

(பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான்-கதை கீழே)

#விநாயகமூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால் தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், #ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் #தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது.

இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் #குழந்தைகளுக்குத்தான்.  இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்” என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, ‘#வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்’ என்று தெரிந்தது.அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே #அமிருத்ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

பிள்ளையாருக்கு எதிரே நின்று #தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக் கொண்டு விட்டாராம். #பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக் கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். #விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்

.”தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “#கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான #குழந்தைத்தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக !!!

No comments:

Post a Comment