முப்பத்து முக்கோடி தேவர்களும் ஈஸ்வரனை வழிபட்ட தினம் தான் சிவராத்திரி : --
திருப்பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத வாழ்வை பெறலாம் என்ற பிரம்மாவின் உபதேசப்படி மந்திரமலையை மத்தாக்கி சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்கத் தொடங்கினார்கள்.
மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார். அமுதம் உண்ணப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் தேவர்கள் வேக வேகமாக கடைந்தார்கள்.
வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது. அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது. இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக வெளிப்பட்டது.
விஷத்தோட வீரியம் தாங்காமல் அவர்கள் சிவ பெருமானிடம் ஓடிப்போய் முறையிட்டார்கள்.நமசிவாய மந்திரம் உச்சரித்தாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்த வனல்லவா அந்த ஈசன். தேவர்களை காப்பதாக உறுதியளித்தார்.
சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான். சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனிபோல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார்.
தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் பகவான் ஈஸ்வரர்.. அன்னை பார்வதி தேவி பதறிப்போனாள். உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார்.
அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.
அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.
No comments:
Post a Comment